
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. வழக்கமான ரெயில்கள் தவிர சிறப்பு ரெயில்களும் நிரம்பி விட்டன.
திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் எல்லா ரெயில்களிலும் நவம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டன.
சேலம், கோவை, மார்க்கமாக செல்லும் ரெயில்களிலும் இடமில்லை. அரசு பஸ்களிலும் 2, 3 மற்றும் 4-ந்தேதி பயணம் செய்ய இடமில்லை.
அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. முன்பதிவு இல்லாத மற்ற பஸ்களிலும்தான் பயணம் செய்ய முடியும். தீபாவளிக்கு 1000சிறப்பு பஸ்கள் அனைத்து போக்குவரத்துக் கழகங்களில் இருந்து இயக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் டோக்கன் பெற்று பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.
விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் இருந்து மட்டும் 480 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து திருச்சி, சேலம், கும்பகோணம் உள்பட பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்களுக்கு முன்பதிவு கிடையாது. இதுபோல சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.
3 மற்றும் 4-ந்தேதியில் ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் இல்லை. அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. ஆன்- லைன் மூலம் புக்கிங் செய்யும் வசதி பெரும்பாலான தனியார் ஆபரேட்டர்களிடம் உள்ளது.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று போக்குவரத்து துறை ஆணையாளர் ராஜாராம் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தனியார் ஆபரேட்டர்கள் 500 ஆம்னி பஸ்களை இயக்கி வருகிறார்கள். 90 சதவீத பஸ்கள் ஆன்லைன் மூலம் முறையான கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.
ஆனால் 10 சதவீத ஆபரேட்டர்கள் ஒன்று அல்லது இரண்டு பஸ்களை இயக்க கூடியவர்கள். கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர்கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.
ஆன்லைன் புக்கிங் ஏஜெண்டாக செயல்படும் “ரெட்பஸ்” இணையதளம் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம்தான் ஒருசில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஸ், ரெயில்களில் அனைத்தும் நிரம்பிவிட்ட காரணத்தால் பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.
3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களுக்கு பகல்நேர சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். படுக்கை வசதி இல்லாத பெட்டிகளாக இயக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன் அடைவார்கள்.
எனவே பகல்நேர ரெயில் விடவேண்டும் என்று பொது மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக